நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற பெயரில், தெலுங்கு சூப்பர் ஹிட் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ரீமேக் செய்து முடிக்கப்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு படம் போல தமிழ்ப் படம் ரீமேக் செய்யப்படவில்லை எனக் கூறி படத்தை வெளியிட மாட்டோம் என அறிவித்தது.
வேறு ஒரு இயக்குனரைக் கொண்டு நாயகன் துருவ்வைத் தவிர மற்ற அனைவரையும் மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தப் போவதாக அறிவித்தது.
பின்னர், பாலாவும், ‘வர்மா’ படத்திலிருந்து படைப்புச் சுதந்திரம் கருதி தானே விலகுவதாக அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன், படத்தின் புதிய நாயகியாக ‘அக்டோபர்’ ஹிந்திப் பட நாயகியான பனிதா சாந்து அறிவிக்கப்பட்டார். இன்று படத்தின் ஒளிப்பதிவாளர் ஆக ரவி கே. சந்திரன் அறிவிக்கப்பட்டார்.
இப்போது படத்தின் பெயரை ‘வர்மா’ என்பதற்குப் பதிலாக ‘ஆதித்ய வர்மா’ என மாற்றம் செய்து படத்தை இயக்கப் போவது யார் என்றும் அறிவித்துள்ளார்கள்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் வங்கா-வின் உதவியாளர் கிரீசய்யா இயக்க உள்ளார். படத்தில் பிரியா ஆனந்தும் நடிக்க உள்ளார்.
முதலில் நாயகன் துருவ்வை மட்டுமே மாற்றப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்கள். இப்போது படத்திற்கு ‘வர்மா’ இசையமைப்பாளர் ரதன் தான் மீண்டும் இசையமைக்கிறார்.
அதோடு, ‘வர்மா’ நாயகியாக நடித்த மேகா சௌத்ரி, ஆதித்ய வர்மா படத்தில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தெரிகிறது.
விரைவில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.