ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரர்தகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன், பிரியதர்ஷினி, மானஸ், நிதிஷ் வீரா, நடன இயக்குனர் விஜி, சண்டை இயக்குனர் முருகன், இசையமைப்பாளர் ஷபிர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்து இயக்குனரை வாழ்த்திப் பேசினார்.
“சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாகச் செய்யக் கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது,” என்று வாழ்த்தினார்.
படத்தின் இயக்குனர் சுரேஷ் பேசுகையில்,
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளர்களாக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் ‘எத்தன்’.
ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்த அளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பாம்புக்கு படம் பண்ணனும் என்று கூறினார்கள்.
பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்தக் கதை தோன்றியது.
‘நீயா’ படத்தில் நிஜ பாம்பைத்தான் காட்டியிருப்பார்கள். அதே போல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்து கொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.
ஒரு நண்பரிடம் பாம்பு படத்தைக் காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார்.
பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம்தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பைத்தான் காட்டியிருக்கிறோம்.
இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம்.
வரலட்சுமிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லலட்சுமி ஆகியோர்தான் இப்படம் பெரியதாக அமையக் காரணம். அவர்களைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி,” என்றார்.
‘நீயா 2’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.