சாதிப் பிரச்சினைகளை உரித்தெடுக்கும் ‘உறியடி 2’

2016ம் ஆண்டு விஜயகுமார் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் வெளிவந்த ‘உறியடி’ படம் சிறப்பான விமர்சனத்தைப் பெற்று கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘உறியடி 2’ இப்போது தயாராகி வருகிறது.

இரண்டாம் பாகத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

அது பற்றி விஜயகுமார் கூறியதாவது,

“2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ உறியடி 2 கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார்.

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்”னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம் ‘உறியடி’ பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது.

‘உறியடி 2’ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம்.

எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா.

‘Of all the arts, for us cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார்.

‘கலைகளில் சினிமா தான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப்படுத்தணும்,” என்றார்.

சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி அரசியலையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக ‘உறியடி 2’ உருவாகி வருகிறது.

இந்தப் படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். விஸ்மயா கதாநாயகியாக நடித்துள்ளார். யு டியூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார்.

‘உறியடி’ படத்தில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள். அசுரவதம் படத்தில் தன் அசுரபலத்தைக் காட்டி, 96 படம் மூலமாக இன்ப ராகம் ஊட்டிய கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

‘உறியடி 2’ கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

Read Previous

நிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’

Read Next

பரபரபப்பான படப்பிடிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘ஜாம்பி’