2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் தமிழ் திரைப்படப் பாடல்களில் தனிப் பெரும் சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது.
யு டியூபில் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இன்று மதியம் 3 மணிக்கு, இந்தப் பாடல் விரைவில் 300 மில்லியன் சாதனையைப் படைக்கும் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்போது யு டியுபில் இந்தப் பாடல் 29 கோடியே 92 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது. 8 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 300 மில்லியன் சாதனை நிகழ்த்தும் நிலையில் இருந்தது.
அந்த 8 லட்சம் பார்வைகள் அடுத்த ஐந்தரை மணி நேரத்தில் கிடைத்து இரவு 8.30 மணிக்கு 300 மில்லியன் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
பாடல் வெளியாகி இத்தனை நாட்களில் கழித்து சில மணி நேரங்களில் 8 லட்சம் பார்வைகள் என்பது சாதாரண விஷயமல்ல.
தமிழ் சினிமா உலகில், தென்னிந்திய சினிமா உலகில் ஒரு பாடல் 300 மில்லியனைக் கடப்பது இதுவே முதல் முறை.
‘கொல வெறி’ பாடல் மூலம் 100 மில்லியன் சாதனையை தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது, இந்திய சினிமா உலகிலும் முதல் முறை படைத்த தனுஷ், இப்போது ‘ரௌடி பேபி’ பாடல் மூலம் 300 மில்லியன் சாதனையை தமிழ் சினிமா உலகிலும், தென்னிந்திய சினிமா உலகிலும் முதல் முறை படைத்திருக்கிறார்.