‘பாகுபலி, பாகுபலி 2’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் நாயகியாக ஹிந்தி நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளார் என்றும், மற்றொரு கதாநாயகியாக இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவகன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
ஆலியா பட், ராம்சரணுக்கு ஜோடியாகவும், டெய்ஸி ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் தமிழ் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இரண்டு புகழ் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படமாக 1920களின் பின்னணியில் இப்படம் உருவாகிறது.
அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரண், கொமரம் பீம் ஆக ஜுனியர் என்டிஆர் நடிக்கிறார்கள்.
‘ஆர்ஆர்ஆர்’ என ஆங்கில எழுத்தின் சுருக்கமாக வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பெயரை மொழிக்கு ஏற்றவாறு விரிவாக வைக்க உள்ளனர். அப்படி விரிவாக்கம் செய்து ரசிகர்களே அதற்கு ஒரு பெயரை வைக்கலாம் என்றும் படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை டிவிட்டரில் பதிவிட்டால் அதிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்வு செய்து அதையே படத்தின் தலைப்பாக வைக்க உள்ளார்களாம்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.