தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி முடித்து வெளியிடுவதற்குள் ஒவ்வொரு தயாரிப்பாளரும், இயக்குனரும் எப்படிப்பட்ட சிக்கல்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
பல பிரச்சனைகள் வெளியே சொல்ல முடியாத நிலையிலேயே அமுங்கிப் போய்விடுகின்றன. அப்படியே ஒரு சிலர் வெளியே சொன்னாலும் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை சினிமாவை விட்டே ஓட வைக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இங்கு விழிப்புடன் இல்லாவிட்டால் அவ்வளவுதான்..என்பதற்கு நேற்று நடைபெற்ற ‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு விஷயம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது.
‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தை இயக்கிய மீரா கதிரவன் மூன்று வருட காலமாக இயக்கி வந்த ‘விழித்திரு’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் மீரா கதிரவன் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை வெளியில் சொன்னார்.
“விழித்திரு’ படம் இவ்வளவு காலமாகத் தயாரிப்பில் உள்ளதே எனப் பலர் கேட்கிறார்கள். இந்தப் படத்தில் 16 முக்கிய நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளார்கள். முழுப் படமும் ஒரு இரவில் நடக்கும் கதை. அதனால் இரவில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த முடியும்.
ஒருவர் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் கூட திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியாது. ஒருவர் வராமல் போனால் மீண்டும் அந்தக் காட்சியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சேர்க்க மாதக் கணக்காகும். இப்படி பல சிக்கல்கள்.
ஒரு தயாரிப்பாளராக மாறின பிறகுதான் ஒரு தயாரிப்பாளரோட முழு வலி என்னன்னு தெரிய வந்தது.
ஒரு ஆண், பெண்ணா மாறி ஒரு காண்டாமிருகத்தை பிரசவிக்கிற வலி அது.
என் பேரு முன்னாடி வரணும், என் பேரு போஸ்டர்ல வரணும், மூஞ்சி பெருசா வரணும்னு சொல்றவங்கள்லாம் பிரமோஷனுக்கு வர மாட்றாங்க.
ஏன், விதார்த் வரலன்னு எனக்குப் புரியலை. ஒரு சம்பவம், இந்தப் படத்தோட பிஆர்ஓ ஒரு நாள் விதார்த்தை கூட்டிக்கிட்டு வந்தாரு. அஜித் சார் உங்ககிட்ட பேசச் சொன்னாருன்னு சொன்னாரு.
‘வீரம்’ படத்துல நான் ஒரு ரோல் பண்ணணும். உங்க டேட்ஸ் கிளாஷ் ஆகும்னு சொன்னாரு.
அஜித் சாரே அனுப்பனாரா, சரின்னேன். அஜித் சார் மேல நான் பெரிய நம்பிக்கை வச்சிருக்கேன். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன். 16 பேர் நடிச்சிருக்காங்க. ஒருத்தர் மிஸ் ஆனால் கூட கன்டினியூட்டி பிரச்சனை வந்துடும்.
திரும்ப எல்லாரையும் சேர்க்க 6 மாசம் வெயிட் பண்ணணும். ‘வீரம்’ படம் பண்ணனும்னு கேட்டாரு. சரி போங்கன்னு என் படத்துல இருந்து அனுப்பி வச்சேன். அதனால, ஆறு மாசம் இந்தப் படம் டிலே ஆச்சி,” என நடந்த விவரங்களைப் பேசி வந்தார்.
அப்போது பிஆர்ஓ உதவியாளர், ‘நோ இஸ்யூஸ்’ என்ற குறிப்பை இயக்குனரிடம் தர, “எதற்கு நோ இஸ்யூஸ், நான் பணம் போட்டிருக்கேன், படம் இயக்கியிருக்கேன், என்ன இஸ்யூஸ், தயாரிப்பாளர்களோட வலியைப் புரிஞ்சிக்கங்கன்னு கேட்கிறேன்,” என தனது வலியை வெளிப்படுத்தினார்.
‘விழித்திரு’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ள மீரா கதிரவன் பெருந்தன்மையுடன் அஜித் கேட்டுக் கொண்டதற்காக விதார்த்தை ‘வீரம்’ படத்தில் நடிக்க அனுப்பியுள்ளார்.
ஆனால், விதார்த்தோ நேற்று நடந்த ‘விழித்திரு’ படத்தின் பிரமோஷனுக்கு வராமல் தவித்துள்ளார்.
தனக்காக படத்தைத் தள்ளி வைத்த மீரா கதிரவனுக்கு ஆதரவாக அஜித் ஒரு சில வார்த்தையாவது பேசுவாரா..அல்லது..விதார்த்தை படத்தின் பிரமோஷனுக்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்வாரா…?.
சிறிய படங்களுக்கு பெரிய படங்கள்தான் எதிரி என சிறிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்போது பெரிய நடிகர்கள் கூட இப்படியெல்லாம் சிக்கலை வரவைப்பார்களா என்பது ஆச்சரியமாக உள்ளது.
https://youtu.be/LbiSebh2DWI