அறிமுக இயக்குனர்களை கௌரவப்படுத்திய ‘மரகத நாணயம்’ குழுவினர்

ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் ராம்குமார், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில், ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் – விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு ‘மரகத புதையல்’ ஒன்றை அளித்து, அவர்களை தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு கௌரவித்தார்.

விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏஆர்கே சரவண், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர், கலை இயக்குநர் என்கே ராகுல், பாடலாசிரியர்கள் முத்தமிழ், அருண்ராஜா காமராஜ், ஜிகேபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்படும் திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இயக்குநர் ஏஆர்கே சரவண் இந்தப் படத்தின் கதையை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக் கூடிய விதத்தில் மிக அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன்,” என்றார் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு.

‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த ‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான். இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நிச்சயமாக திபு நைனன் தாமஸ், இசைத் துறையில் பெரிய வளர்ச்சியை காண்பார். அதற்கு இந்த ‘மரகத நாணயம்’ தான் சிறந்த அடித்தளம்” என்றார் சிவகார்த்திகேயன்.

Read Previous

மூன்று தீபாவளி கொண்டாடிய ‘ஹரிதாஸ்’

Read Next

மீனுடன் நடித்தது சவாலானது – சிபிராஜ்

Most Popular