‘அப்பா’ படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘தொண்டன்’.
சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்.
‘தொண்டன்’ படம் பற்றி சமுத்திரக்கனி கூறியதாவது,
‘‘தொண்டன்’ என்னுடைய 11வது படம். கரூர்ல நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இதுக்கு தூண்டுதலா இருந்தது.
பெண்கள் கல்லூரிக்குள்ள ஒருத்த போயி நாற்காலியோட காலை, அந்த கட்டையை எடுத்து ஒரு பெண்ணை அடிச்சிக் கொன்னான்.
அந்த வகுப்புல இருந்த எல்லா பெண்களுமே பயந்து கத்திக்கிட்டேயிருந்தாங்க. ஆனால், அடி வாங்கினப் பெண்ணைக் காப்பாத்த முடியலை.
அவங்க பயம்தான் அவனுக்குத் தைரியம் கொடுத்தது. அவங்க திருப்பி அடிச்சிருந்தால் என்ன ஆகியிருக்கும்கற கேள்வி எனக்குள்ள இருந்தது. அதுதான் இந்தக் கதைய ஆரம்பிக்கக் காரணமா இருந்தது. அதுக்கப்புறம் பலப்பல விஷயங்கள் சேர்ந்தது.
108 பத்திக் கேள்விப்பட்டேன். சத்தமில்லாம ஒரு பெரிய புரட்சி நடந்துக்கிட்டிருக்கு. அங்க போயி இரண்டு நாள் எல்லாத்தையும் பார்த்தேன். அவங்களோட பயிற்சி எல்லாத்தையும் பார்த்தேன். ரொம்ப புதுசா இருந்தது.
நாம சமீபத்துல ஆறெட்டு மாசத்துல பேப்பர்ல படிச்ச விஷயங்கள், கோபப்பட வைத்த விஷயங்கள், அதிர்ச்சியடைய விஷயங்கள் எல்லாத்தையும் இந்தப் படத்துல கோர்த்து வச்சிருக்கேன். படம் ரொம்ப நல்லா வந்திருக்குங்கறது என்னோட உணர்வு.
‘தொண்டன்’னு சொன்னவுடனே அரசியல்கற மாதிரி ஆகிடுச்சி. இது அரசியல் படமல்ல.
பெண்களுக்கு எதிரான வன் கொடுமையை பார்த்து அவங்களுக்கு தைரியம் கொடுக்கணும்கற ஆசைதான் எனக்கு வந்தது.
இந்தப் படம் வந்ததுக்கப்புறமா ரோட்டுலயோ, எங்கேயோ ஒரு பெண்ணுக்குக் கொடுமை சேர்ந்தால் பெண்களை அவனை அடிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு இந்தப் படத்துல தெளிவா விஷயம் பேசியிருக்கோம்,” என்கிறார் சமுத்திரக்கனி.