விஜய் நடித்து வெளிவந்த படங்களில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்களில் ஒன்று எழில் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’.
இனிமையான பாடல்கள், வித்தியாசமான காதல் கதை என 1999ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்தடுத்து காதல் படங்களாகவே இயக்கி வந்த எழில், கடந்த சில வருடங்களில் கொடுத்த படங்கள் அனைத்துமே நகைச்சுவைப் படங்கள், அதுவும் வெற்றிப் படங்கள்.
“மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளக்கார துரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இப்போது இயக்கி முடித்துள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே இயக்குனர் எழிலை பாராட்டித் தள்ளிவிட்டார்கள். அந்த அளவிற்கு பொறுமைசாலியாகவும், திறமையாகவும், சீக்கிரமே படத்தை முடித்து விட்டார் என நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே குறிப்பிட்டார்கள்.
படத்திற்கு ‘எழில் இருக்க பயமேன்’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம் என்றார்கள். அப்படியிருந்தது அனைவரின் பேச்சும்.
இந்தக் காலத்தில் இப்படி தயாரிப்பாளர்கள் பாராட்டும் இயக்குனர்கள்தான் தேவை. இனிமையான பாடல்கள், நகைச்சுவை, காதல் என இந்தப் படத்தையும் ஹிட்டுக்குத் தேவையான விஷயங்கள் என்னென்ன வேண்டுமோ அவையனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி, மன்சூரலிகான், சாம்ஸ், லிவிங்ஸ்டன், ஜி.எம். குமார், ராஜசேகர், ரவி மரியா, ரோபோ சங்கர், மதுமிதா, ரிஷா, கும்கி அஸ்வின், சுப்புராஜ், இவர்களுடன் விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் முல்லை, கோதண்டம், குரேஷி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நேற்றைய நிகழ்ச்சியில் பேசினார்கள்.
அனைவரின் பேச்சிலும் இருந்த கலகலப்பு, படத்திலும் இருக்கும் என நம்பலாம்.
மே 12ம் தேதி ‘சரவணன் இருக்க பயமேன்’ வெளியாகிறது.