எனக்குக் கிடைத்த கடவுள் ராஜ்கிரண் – கஸ்தூரிராஜா

JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.

கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

பாடல்கள் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் கஸ்தூரிராஜா பேசும் போது,

“துணிகரம்’ என டைட்டில் வைத்ததிலேயே படக் குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டு முறை நான் கோமாளியாகக் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன். இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். முதல் தடவை என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது, இரண்டாவது ‘துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம். எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார். அதனால, இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது,” என்றார்.

“இன்னைக்கு சினிமா கொஞ்சம் ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப் படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர் ஸ்டார் படமும் மூணு நாள்தான். இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான். அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு,” என்று இன்றைய சினிமா சூழலைப் பற்றிப் பேசினார்.

​​​​இயக்குனர் பேரரசு பேசும்போது,

“உதவி இயக்குனராக இருந்து இயக்குனராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்கு போனது இல்ல. ஊருக்குப் போய் ரெண்டு​ ​ ​நாள் தங்கினா, என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலைன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க பையன் 20 வருஷமா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான், ஆனா அது அவங்களுக்குப் பெரிசா தெரியாது. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும், ரொம்பநாள் காத்திருக்கணும். ‘திருப்பாச்சி’ ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன். ‘சிவகாசி’ வெளியான அந்த தீபாவளியைத்தான் நான் ஊர்ல கொண்டாடுனேன்.

ஒரு ராஜா, அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப் பின் யார் நாட்டை ஆளவேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார். காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவைக் கொண்டு வந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்கணும். ஆனால், அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக் காட்டத் தேவையில்லை என உத்தரவிட்டார்.

மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாவது மகன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாவது மகன் சோம்பல் பட்டுக்கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாவது மகனோ ஏழைக்குத்தானே கொடுக்கப் போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான்.

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ நீங்கள் இதை கொடுக்கவேண்டிய அந்த ஏழை வேறு யாருமில்லை. நீங்கள் தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள் எனக் கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார். நல்ல பழங்களைக் கொண்டு வந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படித்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கும் இயக்குனர்கள், ஏனோ தானோவென்று அந்த நேரத்திற்கு வேலை பார்த்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். நல்ல கதையாக தேர்வு செய்து படங்களை இயக்கினால் உங்களுக்கும் வாழ்வு, தயாரிப்பாளருக்கும் லாபம்,” என்றார் பேரரசு.

இந்த விழாவில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பாலசுதன், இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன், நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் பேசினர்.

Read Previous

Enga Amma Rani – Review

Read Next

மே 19-ல் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

Most Popular