இன்று உலகில் எது நடந்தாலும், அதற்கெல்லாம் ஒரு ‘குறியீடு’ இருக்கிறது என்று கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து ரசிகர்களை இன்று ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்தப் பேச்சுக்களில் இருக்கும் ‘குறியீடுகள்’தான் அடுத்த சில நாட்களுக்கு மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரபப்பாகப் பேசப்படும்.
அவர் பேசி முடித்ததுமே அதை சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்தும் விட்டார்கள்.
ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில முக்கிய அம்சங்கள்…
“12 வருஷங்கள் ஆச்சி, உங்களை சந்திச்சி. அப்பலாம் வெற்றி விழா நடக்கும் உங்களை சந்திப்பேன். எந்திரன் நல்லா போச்சி, கபாலி நல்லா போச்சி. இருந்தாலும் சில பிரச்சனைகளால உங்களை சந்திக்க முடியலை. இப்ப ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
முதல்லயே உங்களைச் சந்திக்கணும்னு நினைச்சேன். பத்து பேரா, எட்டு பேரா எடுக்கணும்னு நினைச்சேன், சிலருக்குப் பிடிக்கலை. எனக்கும் பிடிக்கலை. சரி, சரியா பிளான் பண்ணி, ரசிகர்களை வரவழைச்சி, கட்டுப்பாடா நடத்தி, நம்ம ரசிகர்கள்னா, யாரு, எப்படி, நம்மளாலயும் ஒழுங்கா எதையும் பண்ண முடியும்கறதுக்காகத்தான் இப்ப ஏற்பாடு பண்ணேன்.
ஸ்ரீலங்கா போறதா இருந்தது. சில காரணங்களால போக முடியலை. உடனே சில ஊடகங்கள், ரஜினி எதுலயும் ஸ்திரமா இருக்க மாட்டாரு. மைன்ட் சேஞ்ச் பண்ணிக்கிட்டேயிருப்பாரு, தயங்கறாரு, பயப்படறாருன்னு பேசினாங்க, எழுதினாங்க. நான் ஏதாவது ஒரு விஷயம்னு சொன்னா, நிறைய யோசிப்பேன், என் அளவுக்கு.
திண்ணில காலை வைக்கிறோம், உள்ள நிறைய முதலை இருக்குன்னு தெரியுது. எடுத்து வச்ச காலை எடுக்க மாட்டான்னு சொன்னால் என்ன ஆகும், முரட்டு தைரியம்லாம் இருக்கக் கூடாது. பேசறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.
ரஜினி ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும்தான், படம் ஓடறதுக்கு ஸ்டன்ட் பண்ணுவாருன்னு சொல்வாங்க. உங்க ஆசீர்வாதத்துனால, உங்க அன்பால, நான் அப்படி பண்ண வேண்டிய அவசியமில்லை. என் ரசிகர்கள், என் தமிழ் மக்கள் இதுக்குலாம் ஏமாற மாட்டாங்க.
என்னமோ தெரியாது, தமிழ் மக்கள் ஒரு விஷயத்துலதான் ஏமாறாங்க, அதை நான் இப்ப சொல்ல விரும்பலை. படம் நல்லா இருந்தால்தான் வெற்றியடையும், நீங்க என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும் வெற்றி பெற முடியாது.
என் இயக்குனர்கள், நான் நல்ல படங்கள் கொடுத்ததாலதான் நான் இங்க நிக்கறன். ரஜினி ஏமாத்த மாட்டார், ரஜினி நல்ல படம் கொடுப்பாருன்னு நினைச்சிதான் நீங்க வருவீங்க. அதை நான் செஞ்சிட்டிருக்கன்னு நினைக்கிறேன்.
ரஜினி, அரசியலுக்கு வரத்தயங்குவாரு, படம் பார்க்க ரசிகர்களை வரவைக்கத்தான் அப்படி பேசுவாருன்னு சொல்வாங்க. 21 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு அரசியல் விபத்துன்னு கூட சொல்லலாம். அப்ப ஒரு கூட்டணிக்கு, சில காரணங்களால நான் ஆதரவு தெரிவிக்க வேண்டி வந்தது. அப்ப என் பேச்சைக் கேட்டு அதுக்கு ஆதரவு அளிச்சாங்க. அதுல இருந்து என் பேரு அரசியல்ல அடிபட்டுக்கிட்டிருக்கு
அப்போதுல இருந்து சிலர் ஆதாயத்துக்காக நான் ஆதரவு தரன்னு சொல்லி உங்களைத் தப்பா பயன்படுத்திக்கிட்டிருக்காங்க.
நான் ஒரு பெரிய அரசியல் தலைவனோ, சமூக சேவகரோ இல்லை. என் பேரைச் சொல்லி பலர் வராங்கன்றதுக்காகத்தான் சொல்றேன்.
நிறைய ரசிகர்கள் எனக்கு லெட்டர் எழுதறாங்க. நமக்கு பின்னாடிலாம் வந்தவங்க எல்லாம் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு, நாம எப்ப கவுன்சிலர் ஆகறது, எம்எல்ஏ ஆகறது, அமைச்சர் ஆகறதுன்னு எழுதறாங்க. நாம எப்ப ரெண்டு, மூணு வீடு வாங்கறதுன்னு எழுதறாங்க. பேட்டியும் தராங்க. தப்பில்லை, ஆனால், அதை வச்சி பணம் சம்பாதிக்கணும்னு சொல்லும் போது, அதைப் பார்த்தால் வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதான்னு தெரியலை.
இப்பவும் சொல்றேன், என் வாழ்க்கை ஆண்டவன் கையிலதான் இருக்கு. அந்த ஆண்டவன் கையில நான் ஒரு கருவி. அவன் இப்ப என்னை நடிகனா பயன்படுத்திக்கிட்டிருக்கான். நாளைக்கு என்னவா பயன்படுத்துவான்னு தெரியாது.
அவன் என்ன பொறுப்பு கொடுத்தாலும், நியாயமா, உண்மையா, தர்மமா, இருப்பேன். அது என்ன, ஏதுன்னு தெரியாது. அது கடவுள் கையிலதான் இருக்கு.
அப்படி அரசியல் ஆசை இருக்கிறவங்களுக்கு நான் இப்பவே சொல்லிக்க விரும்பறேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு நான் அரசியலுக்கு வந்தால், அந்த மாதிரி ஆளுங்கள கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழையக் கூட விட மாட்டேன். ஆக, இப்பவே ஒதுங்கிடுங்க. ஏன்னா, ஏமாந்துடுவீங்க
தயவு செய்து குடும்பம், குழந்தைகளைப் பார்த்துக்குங்க. குடிப் பழக்கம், புகைப் பழக்கம், எல்லாத்தையும் விட்டுடுங்க, அடிபட்டு சொல்றேன்.
குடிப் பழக்கத்தால, உடம்பு மட்டும் கெட்டுப் போகாது, மைன்ட் கெட்டுப் போகும். சிந்தனை சக்தி கெட்டுப் போகும். நாம எடுக்கிற முடிவு தப்பாய் போயிடும். தயவு செஞ்சி விட்டுடுங்க,” என ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசினார்.
ரஜினிகாந்த் பேச்சில் அரசியலுக்கும் அவருக்குமான தொடர்பு பற்றிய பல குறியீடுகள் புதைந்துள்ளன.
ரஜினியின் பேச்சுக்கள் இப்போதே ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினியின் இன்றைய பேச்சு தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.