ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி மற்றும் பலரது நடிப்பில், இமான் இசையில் எழில் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.
பிரமாண்டமான பாகுபலி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே வெளியான இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பி, சி சென்டர்களில் அமோக வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
குடும்பம் குடும்பமாக வந்து படத்தைப் பார்த்து எந்த கவலையும் இல்லாமல் வாய் விட்டு சிரித்து விட்டு போகிறார்கள். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படக் குழுவுடன் கடலூர் கிருஷ்ணாலயா துரைராஜ், வட ஆற்காடு வினியோகஸ்தர் ஸ்ரீனிவாசன், கோயமுத்தூர் வினியோகஸ்தர் ராஜமன்னார், மதுரை வினியோகஸ்தர் குணசேகரன், ஐ டிரீம்ஸ் திரையரங்கு உரிமையாளர் மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது என தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள்.
“படத்தைக் குறித்த விமர்சனம் வேறு விதமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடித்துப் போய் விட்டது. வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இயக்குனர் எழில் ரசிகர்களின் நாடித் துடிப்பை சரியாக கணித்து வைத்திருக்கிறார்,” என்றார் நடிகர் சாம்ஸ்.
நடிகர் சூரி பேசும்போது, ” எழில் இருக்க பயமேன், எழில் ஒரு மினிமம் கேரண்டி இயக்குனர். எழில் சார் என்ன கொடுப்பார் என ரிலீஸுக்கு முன் நினைத்தேனோ, அது படம் ரிலீஸுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது என உதயநிதி திருப்தியோடு சொன்னார். உதயநிதி மாதிரி நல்ல மனிதருக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும்,” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்குப் பிறகு பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘சரவணன் இருக்க பயமேன்’. இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லையே தவிர, அவை தவறான படங்கள் இல்லை.
பாகுபலி சுனாமிக்கு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்யலாமா ? வேணாமா ? என்ற தயக்கத்தில்தான் இருந்தேன். என் வினியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. குறிப்பிட்ட அளவு, நல்ல திரையரங்குகளைப் பிடித்துக் கொடுத்தார்கள். இன்னும் கூட 80 திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது,” என்றார்.
படத்தின் இயக்குனர் எழில், நாயகி ரெஜினா, நடிகர் யோகிபாபு, ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் நன்றி தெரிவித்துப் பேசினர்.