இந்தியத் திரையுலகில் உள்ள திறமையான திரைப்படக் கலைஞர்களில் ஆமீர்கானும் ஒருவர் என பலரும் பாராட்டுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு கலைஞர், இந்தியத் திரையுலகத்திலேயே, ஹிந்திப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‘பாகுபலி 2’ படத்தை இன்னமும் பார்க்கவில்லை என்று சொல்வது ஆச்சரியம்தான்.
தான் நடித்துள்ள ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ‘பாகுபலி 2’ பற்றிய கேள்விக்கு ஆமீர்கான் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், ”பாகுபலி 2’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு படக் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். மக்கள் அந்தப் படத்துடன், கதாபாத்திரங்களுடன் மிகவும் ஒன்றிப் போய் படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். அது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி.
‘பாகுபலி‘ ஹிந்தித் திரைப்படங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பாலிவுட்டிற்கு சுட்டிக் காட்டியிருக்கிறது. நாம் அந்த அளவிற்கு இன்னும் போகவில்லை.
தனிப்பட்ட முறையில் பாகுபலி 2 வெற்றியை நான் மிகச் சிறந்ததாகப் பார்க்கிறேன், இதுதான் சினிமா. மக்கள் அதனுடன் தொடர்புபடுத்திக் கொண்டால், திரைப்படங்களுக்கு மொழி ஒரு தடையே இல்லை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் ‘பாகுபலி 2’ பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன் என நினைக்கிறேன்,” என கூறினார்.
ஒரு நல்ல படம் வந்தால், அதைப் பற்றிக் கேள்விப்பட்டு ஓடிச் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு மத்தியில், ஆமீர்கான் போன்றவர்கள் இன்னமும் ‘பாகுபலி 2’ படத்தைப் பார்க்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.