காமிக் புக் தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலசந்திரன், சிவகேவுவ், கவிதை குண்டர் எம்சி ஜாஸ், சுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’.
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. கடந்த வருடம் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சாலை வழியே சென்னை முதல் சிங்கப்பூர் வரை படக் குழுவினர் பயணம் செய்தார்கள். அதன் மூலம் படத்தைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது என்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ், இசையமைப்பாளர் ஜிப்ரான் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இப்படத்தை முதலில் சிங்கப்பூரில் மட்டுமே படமாக்க நினைத்தாராம் இயக்குனர் அப்பாஸ். ஆனால், சென்னை வந்திருந்த போது அவருடைய பாஸ்போர்ட் தொலைந்து போனதால், சில மாதங்கள் இங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை வந்ததாம். அந்த சமயத்தில் இந்தப் படத்தை இங்கேயே உருவாக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால், சிங்கப்பூர் தமிழ்ப் படமாக இல்லாமல் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.
“படம் பார்க்கும் அனைவரையும் இந்தப் படம் நிச்சயம் ரசிக்க வைக்கும். படத்திற்கு வந்தால் நிச்சயம் ஜாலியான ஒரு அனுபவம் கிடைக்கும். சமீபத்தில் இப்படத்தை இளைஞர்களுக்குப் போட்டுக் காண்பித்தோம். நாங்கள் என்ன நினைத்தோமோ அந்த ரிசல்ட் அவர்களிடம் இருந்து கிடைத்தது. சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணமாகும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை இது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட உள்ளோம்,” என்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர்.