‘ஐயோ பாவம், அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டிருப்பாரு’ மொமென்ட் நேற்று ‘விவேகம்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசனுக்குக் கிடைத்திருக்கும்.
கமல்ஹாசனை உலக நாயகன் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழிலும், தெலுங்கிலும் சில வெற்றிப் படங்களின் நாயகி.
மகள் அக்ஷராஹாசன், அஜித் நாயகனாக நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது பெருமைதான் என கமல்ஹாசனும் நினைத்திருப்பார்.
அந்தப் பெருமையுடன் நேற்று காலை படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு டிவீட் போட்டார்.
“‘விவேகம்’ படத்தைத் தற்போது மகள் அக்ஷராவுடன் பார்த்து வருகிறேன், எதிர்பார்ப்புடன், நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என பதிவிட்டிருந்தார்.
கமல்ஹாசன் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது போட்ட டிவீட் அது. அந்த டிவீட்டுக்கு அஜித் ரசிகர்கள் அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அந்த டிவீட்டிற்கு இதுவரை 39000 லைக்குகள், 11 ஆயிரம் ரிடிவீட்டுகள், 1400 கமெண்ட்டுகள் கிடைத்துள்ளன. காலை 8.56 மணிக்கு கமல் போட்ட டிவீட் அது.
விவேகம் படத்தின் மொத்த நீளம் 149 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடும் படம். கமல்ஹாசன் 8.56 மணிக்கு படத்தைப் பார்க்க ஆரம்பித்திருந்தால் சுமாராக நண்பகல் 12 மணிக்கு படத்தைப் பார்த்து முடித்திருப்பார். ஆனாலும், அந்த இரண்டரை மணி நேரத்திற்குள் ஆதார் கார்டு பற்றிய அவருடைய கருத்தையும் 11.32 மணிக்கு பதிவிட்டிருந்தார்.
அதன் பிறகு கமல்ஹாசன் ‘விவேகம்’ படம் பற்றியும் அவருடைய மகள் அக்ஷராஹாசன் அறிமுகம் பற்றியும் ஏதாவது பதிவிடுவார் என்று அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் காத்திருந்தார்கள், இப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பு படம் பார்க்கிறேன் என்று டிவீட் போட்டவர், படம் பார்த்து முடித்தும் (?) எந்த ஒரு டிவீட்டும் போடவில்லை.
அக்ஷராஹாசன் அஜித் ஜோடியாகவோ அல்லது படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று கமல்ஹாசன் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அக்ஷரா ஐந்து நிமிடம் கூட படத்தில் வரவில்லை என்றதும் என்ன நினைத்திருப்பாரோ…?.
மீண்டும்…இந்தச் செய்தின் முதல் வரியை மட்டும் படிக்கவும்…