ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் தயாரிப்பில் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில், பால முரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஹர ஹர மஹாதேவகி’.
படம் பற்றி நாயகன் கௌதம் கார்த்திக் கூறியதாவது,
“நான் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் கதையை கதையாகத்தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும்.
இந்தப் படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்கக் கூடாது என்று சொல்கிறோம் என்றால், நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம். அதனால் தான் இந்தப் படத்தை ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் என்று சொல்கிறோம்.
நான் ‘ஹரஹர மஹாதேவகி’யையும் , ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தையும் ‘யூத் ஆடியன்ஸ்’ அனைவரையும் மனதில் வைத்துதான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஸ்டீரியோ டைப் ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
படத்தின் கதையைக் கேட்டு அப்பா சிரித்தார். இந்த படம் அடல்ட் காமெடி தான் , செக்ஸுவல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் ‘அடல்ட் காமெடி’ பற்றிய சரியான புரிதல் இல்லை. ‘ஹரஹர மஹாதேவகி இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும்,” என்றார்.
‘ஹர ஹர மகாதேவகி’ படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகிறது.