விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ், வடிவேலு மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
மிகுந்த பரபரப்புடன் வெளியான இந்தப் படம் டிக்கெட் கட்டண உயர்வு, கடைசி நேரச் சிக்கல்கள் என பல தடைகளைக் கடந்துதான் வெளியானது. இருந்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததால், செவ்வாய்க் கிழமை மதியம்தான் முன்பதிவு ஆரம்பமானாலும் நேற்றே அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
நேற்றைய முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் இப்படம் சுமார் 47 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 24 கோடி ரூபாயும், கேரளாவில் 4.5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 கோடியும், இதர மாநிலங்களில் 50 லட்ச ரூபாயும், அமெரிக்காவில் 3 கோடியும், மற்ற வெளிநாடுகளில் 9 கோடியும் என மொத்தமாக 46 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள்.
இது, ‘கபாலி, விவேகம்’ படங்களின் வசூலைக் காட்டிலும் அதிகம். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகம் வசூலித்துள்ள முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
‘கபாலி’ படம் முதல் நாள் வசூலாக 22 கோடியும், ‘விவேகம்’ படம் 16 கோடியும் பெற்றதாக காலை நாம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தோம். அந்த செய்தியிலேயே ‘மெர்சல்’ படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் சுமார் 25 கோடி வரை இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம். அது நமது கணக்குப்படி ஒரு கோடி ரூபாய் மட்டுமே குறைந்தது.
இதன் மூலம் தென்னிந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் ‘பாகுபலி 2, கபாலி, பாகுபலி, கைதி நம்பர் 150’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘மெர்சல்’ படம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால், ‘மெர்சல்’ படம் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.