‘காலா’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த நடிகையானவர் சாக்ஷி அகர்வால்.
அடுத்து ராய் லட்சுமி நடிப்பில் தயாராகி உள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கி அனீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.
தான் தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி சாக்ஷி அகர்வால் கூறுகையில்,
“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியானது. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும்.
எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார்.
எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப் பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
இயக்குநர் அனீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக நடிக்க இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.
நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி நடித்து வருகிறேன்,” என்கிறார்.
சாக்ஷி அகர்வால் நெல்லைத் தமிழில் பேசி நடிப்பதைப் பார்த்து படக்குழுவினரே பாராட்டினார்களாம்.