சமுத்திரக்கனி அல்ல சமூகக்கனி – சசிகுமார்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சசிகுமார் பேசியதாவது,

“இப்போது படங்களைத் தயாரிப்பதை விட வெளியிடுவதுதான் மிகவும் கஷ்டமாக உள்ளது. சின்ன படங்களை வெளியிடுவதில்தான் சிக்கல் இருந்தது. அந்த நிலை இப்போது பெரிய படங்களுக்கும் வந்துவிட்டது.

சமூகம் சார்ந்த கருத்துக்களை சொல்வதில் இயக்குனர் சமுத்திரக்கனி வல்லவர். அவர் சமுத்திரக்கனி அல்ல சமூகக்கனி.

இந்தப் படத்தில் அஞ்சலி, அதுல்யா என இரண்டு ஹீரோயின்கள். இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று பார்த்தால் தோழிகள் ஆகிவிட்டார்கள்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நமீதா என்ற திருநங்கை நடித்துள்ளார். அவரது காட்சிகளை கண்ணீருடன் பார்த்தார். திருநங்கைகளை நாம் ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர்களும் இந்த சமூகத்தில் ஒருவர் என்று நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மலையாளத் திரையுலகத்தில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் இணைந்து 42 படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு சமுத்திரக்கனியின் இயக்கத்தில் பத்து பதினைந்து படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை,” என்றார்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், அஞ்சலி, அதுல்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை சிஎல்என் சினிமாஸ் சார்பில் பிரவீண் பிரசாத் வெளியிடுகிறார்.

Read Previous

தமிழ் சினிமா – செப்டம்பர் 20, 2019 வெளியான படங்கள்

Read Next

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ செப்டம்பர் 27 வெளியீடு