சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் பற்றிய அனுபவங்களைப் பற்றி விக்ராந்த் கூறியதாவது,
‘‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு எனக்கு நடிக்கக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம்.
‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான, உணர்சிபூர்வமான கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்துள்ளார் இயக்குநர்.
சுசீந்திரன் சார் என்னை மிகப் பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் என் சகோதரர், அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். சொல்லப் போனால் அவர்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்கத் தயார். சுசீந்திரன் சார் என்னிடம் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க, இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம் என்றார். முதலில் சாதுவாக காட்டலாம் என்று கண்ணாடிலாம் கொடுத்தாங்க. அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும் என்றார்.
சுசீந்திரன் சார் இந்த பட ஆரம்பத்திலேயே அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம் அதில் நான் நடிக்கப் போகிறேன் என்றார். முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நீ, மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான் என்று என்னை அதிலும் நாயகனாக நடிக்க வைத்துள்ளார். படத்தை செல்வசேகரன் சார் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாகக் கற்று வருகிறேன். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும்.
வெண்ணிலா கபடி குழு முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை அக்கதையை பொறுத்த வரை சுசீந்தரன் சாரின் தந்தை தான் நிறுவனர். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.
கவண், தொண்டன், கெத்து, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர் பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு 2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.
பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதே போன்று நடிப்புத் திறமையை தொடர வேண்டும் என்று உக்குவித்தார். மேலும் இன்னும் சில இயக்குனர்கள் பாராட்டினார்கள். அது எனக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் ஊக்குவிக்கிறது. இனி வரும் படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன்,” என்றார் விக்ராந்த்.