80களில் கொடி கட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அனைவரும் ஊதா நிற உடையணிந்து கடந்த 17ம் தேதி காலை விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் உள்ளிட்ட கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அங்குள்ள கூடத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வரத் துவங்க, நடிகை சுஹாசினி மற்றும் நடிகை லிசி ஆகியோர் நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் அனைவரையும் உபசரித்தனர். அதன் பின்னர் மும்பை, கேரளா, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய இடங்களிலிருநது ஒவ்வொரு திரையுகப் பிரபலங்களும் வந்த வண்ணம் இருந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற கூட்டு புகைப்படத்தில் இந்தியத் திரையுலகை சார்ந்த 28 பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்து கொண்டனர். இந்தக் கேளிக்கையில் ஓர் அங்கமாக 1960 மற்றும் 70களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
இதோடு அல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம், பாலிவுட் புகழ் பூணம், ஜாக்கி ஷ்ரோப், தென்னிந்திய புகழ் பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோர்களின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடினார். பின்பு அந்த பாடலின் நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவு கூர்ந்தனர்.
அதன் பின்னர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளைப் பற்றியும் விவாதித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட 28 பிரபலங்களும் 19ம் தேதி பிரியா விடை பெற்று அவரவர் ஊர்களுக்குத் திரும்பினர்.
இந்த நிகழ்ச்சியில், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கிஷெராப், பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜுன், நரேஷ், பானுசந்தர், சுமன், சுரேஷ், ரகுமான், சுகாசினி, குஷ்பு, ராதிகா, அம்பிகா, ராதா, ஜெயசுதா, பூனம் தில்லான், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யாகிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகியோர் கலந்து கொண்டனர்.