வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது.
தெலுங்கில் இப்படம் ‘காக்கி’ என்ற பெயரில் வெளியானது. பிரபல ஆடியோ நிறுவனமான ஆதித்யா மியுசிக் தெலுங்கில் இப்படத்தை வெளியிட்டது.
இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் இப்படம் வெளியானது. இரு மொழிகளிலும் ஒரே மாதிரியான வரவேற்பு படத்திற்குக் கிடைத்துள்ளது.
முதல் வார இறுதி வசூலில் இரு மொழிகளிலும் இந்தப் படம்தான் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது. தமிழில் வேறு எந்தப் படமும் இந்தப் படத்திற்குப் போட்டியாக அமையவில்லை. தெலுங்கில் நேரடித் தெலுங்குப் படங்களைக் காட்டிலும் ‘காக்கி’ படத்திற்கு வரவேற்பு அதிகம் இருந்திருக்கிறது.
கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த ‘காஷ்மோரா, காற்று வெளியிடை’ ஆகிய படங்கள் வசூலில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அந்தக் குறையை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தீர்த்து வைத்துவிட்டது.
படத்தை வாங்கிய அனைவருக்கும் இப்படம் லாபத்தைக் கொடுக்கும் என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.