தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, விஷால் விடுத்த எச்சரிக்கை

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாருக்குச் சொந்தமான கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக்குமார். இவர் சசிக்குமாரின் உறவினரும் கூட. நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த பல சங்கடங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து சசிகுமார் இயக்குனர்கள் அமீர், சேரன், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன் உள்ளிட்டவர்களுடன் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அன்புச்செழியன் மீது புகார் கொடுத்தார். காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

அப்போது பேசிய இயக்குனர் அமீர், “இது போன்ற துர்சம்பவம் தமிழ் திரைத்துறையில் நடைப்பெறுவதாகவும், தட்டிக்கேட்க வேண்டிய சங்கங்கள் அமைதிக்காக்கா கூடாது என்றும் அப்படி சங்கம் தொடர்ந்து அமைதி காத்தால் மொத்த சினிமா துறையையும் இழுத்து மூடிவிடுங்கள்,” என கோபமாகப் பேசினார்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

“கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.

பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செ ய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமைக்கு ஒரு தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டது திரையுலகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

8ம் ஆண்டாக ஒன்று கூடிய 80களின் நட்சத்திரங்கள்

Read Next

எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் – எஸ்ஏ சந்திரசேகர்