தியேட்டர்களில் டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, தற்போது தியேட்டர்களில் வாகன நிறுத்தக் கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
அதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ்த் திரையுலகிற்கு பலவித நன்மைகளைச் செய்து வரும் தமிழக அரசு, மேலும் ஒரு பேருதவியை செய்தமையால், தமிழ்த் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த மாதம் எங்களது தமிழ்த் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் திரு.விஷால் அவர்கள், தலைமையில் தமிழக முதல்வர் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம்.
அதில், திரையரங்க நுழைவுக் கட்டணத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல், திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே, தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தி, உயர்த்தி வழங்கியது.
தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டண வசதியை முறைப்படுத்தி (Corporation, Municipality Special Grade – கார் -ரூ.20, இருசக்கர வாகனம்- பைக்- ரூ.10, Municipalities கார்-ரூ.15, பைக்-ரூ.7, Town, Village Panchayat – கார்-ரூ.5, பைக்- ரூ.3) வழங்கியுள்ளதற்கு, எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல ஷாப்பிங் மால் தியேட்டர்களில் வாகன நிறுத்தக் கட்டணம் என்பது படத்தின் டிக்கெட் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இது பற்றி பலரும், புகார் தெரிவித்து வருகிறார்கள். தற்போது முறைப்படுத்தப்பட்ட கட்டணங்களை அவர்கள் வாங்குவார்களா? என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.