இந்தியில் ‘நாயக்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.
1999-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘முதல்வன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியிலும் இந்தப் படம் ‘நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
ஷங்கர் இயக்கிய ‘நாயக்’ படத்தில் அனில் கபூர், ப்ரீத்தி ஜிந்தா, அம்ரீஷ் பூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், தொடர்ச்சியான தொலைக்காட்சி ஒளிபரப்பினை வைத்து இப்போதும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.
தற்போது ‘நாயக்’ படத்தின் 2-ம் பாகத்தினை உருவாக்கவுள்ளனர். இதனை முன்னணி இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தயாரிக்கவுள்ளார். மிலன் லுத்ரியா இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதில் நாயகனாக நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் ‘நாயக் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும், ‘நாயக் 2’ குறித்து ‘நாயக்’ படக்குழுவினரிடம் முறையான அனுமதி வாங்கி இருக்கிறீர்களா என்பது விரைவில் தெரியவரும்.