ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
’விடாமுயற்சி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத் தயாரிப்பின் மூலமாக தமிழில் கால் பதிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தெலுங்கில் ‘புஷ்பா’, ‘ரங்கஸ்தலம்’, ‘ஜனதா கேரேஜ்’, ‘உபேனா’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிவதாக இருந்தது. இதற்கான ஒப்பந்தம் போடப்படாமல், பேச்சின் அடிப்படையிலேயே இருந்தது.
ஆனால், திடீரென்று இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வீரம்’ படத்துக்குப் பிறகு அஜித் – தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் படமாக இது அமைந்துள்ளது.
இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்த போது, “ஜி.வி.பிரகாஷ் பணிபுரிய இருந்தது உண்மை தான்.
ஆனால், அஜித் தான் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் பணிபுரிந்து நீண்ட நாளாகிவிட்டது. அவருடன் பணிபுரிய அறிவுறுத்தினார். ஆனால், ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று திரையுலகினருக்குத் தெரியும்.
இது தொடர்பாக இயக்குநர் ஜி.வி.பிரகாஷிடம் பேசிவிட்டார்.
மேலும், பொங்கல் தினத்தன்று படத்தின் பூஜை நடைபெறவில்லை. சென்னையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புதிதாக பெரிய இயக்குநர் அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இதற்கான பூஜை மட்டுமே நடைபெற்றுள்ளது.
தங்களுடைய முதல் தமிழ் படத்தின் பூஜை என்பதால், பிரம்மாண்டமாக நடத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்கள்