வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.
நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 44 நாட்களில் 90 சதவீதம் முடிந்துவிட்டது.
‘அவள்’ படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி ஆர்ஜே பாலாஜி கூறுகையில்,
“ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம்.
படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகப் பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.
இயக்குநர் என்ஜ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்,” என்றார்.