தமிழ் ரசிகர்களிடம் யூ டியூப் பிரபலமானதைத் தொடர்ந்து, அதில் தனி திறமைசாலிகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் பல புதுப்புது விஷயங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.
நகைச்சுவை நிகழ்ச்சிகள், குறும் படங்கள், சினிமா விமர்சனங்கள், செய்திகள், சுவாரசியமான வீடியோக்கள் என பலர் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்படி நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிய கோபி, சுதாகர் என்ற இருவர் யு டியூப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர்.
தற்போது ‘கிரவுட் ஃபண்டிங்’, அதாவது மக்களிடமிருந்து நிதி திரட்டி, ஒரு சினிமா நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளனர். மக்களிடமிருந்து சுமார் 6 கோடி நிதியை அவர்கள் திரட்டி உள்ளார்கள்.
அந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. முதலில் நிதி வழங்கிய 100 பேரை நேற்றைய விழாவுக்கு அழைத்து சிறப்பித்தனர்.
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் அவர்கள் தயாரிக்கும் முதல் தயாரிப்பிற்கு ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’ எனப் பெயர் வைத்துள்ளார்கள்.
இப்படத்தை SAK என்பவர் இயக்குகிறார். கோபி, சுதாகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.
‘துருவங்கள் 16, மாஃபியா’ படங்களக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க உள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
