தேர்ட் ஐ கிரியேஷன் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘மரிஜுவானா’.
‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரிஷி ரித்விக் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ஆஷா பார்த்தலோம் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘மரிஜுவானா’ என்பது போதைப் பொருளான கஞ்சா-வின் அறிவியல் பெயர்.
ஒரு சில வெளிநாடுகளில் இது மருத்துவத் துறையில் மருந்தாக பயன்படுத்தப்பட்டாலும், நமது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்.
இந்த மரிஜுவானா பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக போதைப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்துபவர்கள் மூலமும் பெரும்பாலான குற்றங்கள் நடந்து வருகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த்.
படம் பற்றி அவர் மேலும் கூறுகையில்,
“போதைப் பொருளைப் பயன்படுத்வதன் மூலம் அதைப் பயன்படுத்துபவர்களின் மனநிலை மாறி ஒரு சைக்கோ போல நடந்து கொள்வார்கள். அந்த போதையில் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. அந்த விதத்தில்தான் பல குற்றங்கள் நடந்து வருகிறது.
போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள், வசதி இல்லாதவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.
படத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு காட்சி கூட கிடையாது. அதனால் ஏற்படும் பாதிப்புகள், பிரச்சினைகள் ஆகியவைதான் படத்தின் கதை,” என்கிறார் இயக்குனர்.
படத்தின் நாயகன் ரிஷி படம் பற்றி கூறியதாவது,
“அட்டு’ படத்தில் என்னுடைய நடிப்புக்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்ததற்கு நேரெதிரான கதாபாத்திரம் இந்த ‘மரிஜுவானா’ படத்தில்.
இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கொஞ்சம் சைக்கோத்தனமான போலீஸ். குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கும் விதத்தில்தான் இக்கதாபாத்திரம் அப்படி சைக்கோவாக நடந்து கொள்ளும்.
இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நன்றாக பயிற்சி எடுத்து நடித்தேன். ‘அட்டு’ படத்தில் நடித்தற்கு எப்படி நல்ல பெயர் கிடைத்ததோ, அது போலவே இந்தப் படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன். அதற்கு இயக்குனர் ஆனந்த்தும் நல்ல உதவி புரிந்தார்,” என்கிறார்.
‘மரிஜுவானா’ படத்தை தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள்.