சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. சுமார் 175 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. விரைவில் 200 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தவுள்ளது.
தமிழகத்தில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூல் சூறாவளியை நடத்தி வருகிறது என்று சொல்லலாம். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 2-ம் இடத்தினை எட்டியுள்ளது. விரைவில் முதல் இடத்தினையும் பிடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றியைத் தொடர்ந்து கமல், தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார்கள். மேலும், தயாரிப்பாளர் அன்புசெழியனையும் சந்தித்தார் இயக்குநர் சிதம்பரம். இந்தச் சந்திப்பினை முன்வைத்து பல்வேறு யூகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
முதற்கட்ட சந்திப்பில் தனுஷ் – சிதம்பரம் இருவருமே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் குறித்தே பேசியிருக்கிறார்கள். ஆனால், 2-ம் கட்ட சந்திப்பில் தனக்கு ஏதேனும் கதையிருந்தால் சொல்லுங்கள் எனவும், அன்புச்செழியன் தயாரிப்பார் என்றும் பேசியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்தே அன்புச்செழியனையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் சிதம்பரம்.
ஆனால், தனுஷிற்கு தன்னிடம் கதையில்லை எனவும், அடுத்து மலையாள படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிதம்பரம். தமிழில் பல்வேறு நடிகர்கள் பேசினாலும், இப்போதைக்கு தமிழ் படமில்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் சிதம்பரம்.