கன்னட திரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக் கொண்டு வரும் நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் நான்காவதாகத் தயாரிக்கும் ‘கேடி – த டெவில்’ படம் பற்றிய அறிவிப்பு நிகழ்வு பெங்களூரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது.
பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் துருவா சர்ஜா, இயக்குனர் பிரேம், தயாரிப்பாளர் கே.வி.என், சுப்ரித், கன்னட திரைப்பட நடிகை ரக்ஷிதா, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இப்படத்தின் டைட்டில் அறிமுக டீசருக்குக் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்புக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புகளுக்கு முறையே சஞ்சய் தத், மோகன்லால் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் குரல் கொடுத்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் இதுவரை ஒரு திரைப்படத்தின் டைட்டில் டீசர் செய்யாத சாதனை இது. கன்னடத் திரைப்படத் துறையின் முதல் பான் இந்தியா திரைப்படம் என்பதைக் குறிக்கும் வகையில், டீசரின் பிரம்மாண்டம் அமைந்திருக்கிறது.
இவ்விழாவில் இயக்குநர் பிரேம் பேசுகையில்,
"எங்கே நல்லது இருக்கிறதோ, அங்கே கெட்டதும் இருக்கும். உதாரணத்திற்கு, ராமன் இருந்தபோது, ராவணனும் இருந்தான். படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளன. இந்தப் படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. இந்த படம் கேஜிஎஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம்,”.
நாயகன் துருவா சர்ஜா பேசுகையில்,
"சஞ்சய் தத் ஒரு லெஜன்ட். கேடி டீசர், பார்க்க ஒரு ஆக்சன் கலந்ததாக இருந்தாலும், குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது. கேடி மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது, பார்வையாளர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.”
நடிகர் சஞ்சய் தத் பேசுகையில்,
"நான் இப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் கேவிஎன் புரொடக்ஷஸுக்கு வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து தென்னிந்தியப் படங்களில் அதிகமாக வேலை செய்யப் போகிறேன் என்று நினைக்கிறேன், எனவே இந்த வாய்ப்பிற்காக மீண்டும் நன்றி. பிரேம் சார், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அனைவருக்கும் நன்றி. டீசரைப் பார்த்து கொண்டாடுங்கள்.
இயக்குனர் பிரேமின் மனைவி நடிகை ரக்ஷிதா பேசுகையில்,
"சஞ்சய் தத் சார் இல்லாமல் இந்த நிகழ்வு முழுமையடைந்திருக்காது, அவருக்கு நன்றி. அனில் ததானியின் ஆதரவு மகத்தானது, அவருக்குப் பெரிய நன்றி. இந்த படம் துருவா சர்ஜாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்."
கேவி என் புரொடக்ஷன்ஸ் பிசினஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் தலைவர் சுப்ரித் பேசுகையில்,
"படத்தில் அழுத்தமான கதை உள்ளது. பிரேம் சார் இந்தத் திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறார். பிரேம் சாருக்கு அவர் செய்யும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு பெரிய கிரேஸை உருவாக்கும் திறமை உண்டு. இந்தப் படத்திற்கு துருவா சர்ஜாவை விட வேறு ஒரு நடிகர் பொருத்தமாக இருக்க முடியாது.
தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்க உள்ளது. கன்னடப் பதிப்பை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கவுள்ள நிலையில், இந்தி பதிப்பை அனில் ததானி தலைமையிலான எஎ பிலிம்ஸ் வழங்கவுள்ளது. தெலுங்குப் பதிப்பை தெலுங்குத் திரையுலகின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான சாய் கொரபதி தலைமையிலான வாராஹி சலன சித்திரம் வழங்கவுள்ளது. மலையாளப் பதிப்பை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் வழங்க உள்ளது.