சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் பலர் நடித்து 1972ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’.
டிவியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் இப்படத்தைப் பார்த்து சிரிப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்னமும் இருக்கிறது.
அப்படிப்பட்ட நகைச்சுவைப் படத்தை தற்போது மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.
கண்ணன் இயக்க, மிர்ச்சி சிவா, யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கப் போகிறார்கள். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாபு, மனோரமாக கதாபாத்திரத்தில் ஊர்வசி ஆகியோர் நடிக்க உள்ளார்களாம். லட்சுமி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ஒருவரிடம் பேசி வருகிறார்களாம்.
ஜுலை 15 இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி 35 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைய உள்ளதாம். படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படத்தை மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.