விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும் என்று கார்த்தி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் சென்னையிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அந்தச் சமயத்தில் கார்த்தி குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருந்ததால், விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.
இன்று (ஜனவரி 4) காலை சென்னை வந்த கார்த்தி, தந்தை சிவகுமாருடன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்ப்ட இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் கார்த்தி பேசியதாவது:
“விஜயகாந்த் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும். கேப்டனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததில்லை.
கேப்டனுடைய படங்கள் ரொம்ப பிடிக்கும். அவர் போலீஸாக நடித்தால், கண்டிப்பாக 10 முறையாவது பார்ப்போம். நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்தவுடன் அவரை சந்தித்துப் பேசும் போது, ரொம்ப சந்தோஷமாக பேசினார். அது தான் அவருடன் நன்றாக பேசிய தருணம்.
நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். தலைவர் என்றால் முன்னின்று வழிநடத்தி, இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை அவரைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்கிறோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் முன்னின்று வேலை செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
பெரிய ஆளுமை இன்று நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தம். எப்போது அவர் இல்லை என்ற வருத்தம் இருந்துக் கொண்டே இருக்கும். அவர் எங்களுடைய மனதில் எப்போதும் இருப்பார்.
ஜனவரி 19-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி அவர் புகழ் எப்போதும் நிலைப்பது போல், நாங்கள் செய்ய வேண்டியது, நடிகர் சங்கம் செய்ய வேண்டியது, அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள் என அனைத்துமே அதில் சொல்வோம்.
கேப்டனின் புகழ் எப்போதும் இருக்க வேண்டும். அவர் நிறைய அன்புக் கொடுத்துள்ளார். அந்த அன்பு எப்போதும் தமிழ்நாடு முழுக்க பரவிக் கொண்டே இருக்கும் என நம்புகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ”இவ்வாறு கார்த்தி பேசினார்.