சினிமா பிரபலங்கள் பாராட்டில் ‘கன்னி மாடம்’

ரூபி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

விஜய் சேதுபதி, இயக்குனர் விக்ரமன், சமுத்திரக்கனி, பரத், திண்டுக்கல் லியோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில்,

“போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறை தன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும், பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை  கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசும் போது,

“சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும், வாழ்த்துகள்,” என்றார்.  

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,

“போஸ் வெங்கட்  சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். கன்னி மாடம் நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

பரத் பேசும் போது,

“நானும் போஸ் வெங்கட் அவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். கன்னி மாடம் தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

திண்டுக்கல் லியோனி பேசுகையில்,

“தமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றி படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் ரிக்‌ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர். ரஜினி ஆட்டோ டிரைவராக  நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள்  மீது உள்ள அன்பில் அவர்களைப் பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

தயாரிப்பாளர் ஹஷீர் பேசும் போது,

“போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறிய போதே  மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களைத் தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். கன்னி மாடம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி,” என்றார்.

‘கன்னி மாடம்’ பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது.
 

Read Previous

மாஸ்டர் – குட்டி கதை – பாடல் வரிகள் வீடியோ

Read Next

கன்னி மாடம் – டிரைலர்

Most Popular