ஜூன் மாதத்தில் கமல் நடிப்பில் 2 படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.
கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கல்கி’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் ‘கல்கி’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். இதன் இரண்டாம் பாகத்தில் தான் கமலுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதத்தில் வெளியீடு என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனிடையே ஜூன் 27-ம் தேதி ‘கல்கி’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்டது
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கல்கி’ படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகி உள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.
‘கல்கி’ வெளியாவதால் ‘இந்தியன் 2’ வெளியீடு தள்ளிப் போகுமா என்று விசாரித்தால், ஜூன்14-ம் தேதி அன்றே ‘இந்தியன் 2’ வெளியாகவுள்ளது என்கிறார்கள். தங்களுடைய படங்கள் வெளியீடு தொடர்பாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களே பேசித்தான் 2 வார இடைவெளியில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள்.
ஆகையால், ஜூன் மாதத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ’கல்கி’ என இரண்டு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது.