’கள்வன்’ படத்தினை திடீரென்று வெளியீடு என அறிவிப்புக்கு பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘ரெபல்’. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே, ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள ‘கள்வன்’ படமும் ஏப்ரல் 4-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளது. இது வர்த்தகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்தது ‘கள்வன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
‘கள்வன்’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. பலமுறை தாமதம் ஆனாலும் பொறுமை காத்து வந்தது. இறுதியாக தங்களுடைய வெளியீட்டில் மே மாதம் என்று குறிப்பிட்டு விட்டோம் எனவும், ஏப்ரலில் படத்தினை வெளியிடுங்கள் எனவும் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.
இதில் தாமதம் செய்தால், படத்தின் ஓடிடி உரிமையை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தது. இதனால் உடனடியாக பணிகளை முடித்து, வெளியீட்டிற்கான விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டது ‘கள்வன்’ படக்குழு.
‘ரெபல்’ மற்றும் ‘கள்வன்’ ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது.