அப்பா, மகள் பாசம் தான் ‘கைதி’ – லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கைதி’.

கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

‘கைதி’ படம் பற்றி அவர் பேசுகையில்,

“இந்தக் கதையை சொன்ன உடனே கார்த்தி ஒத்துக் கொண்டார். ஹிரோயின் இல்லை, காமெடி இல்லை என அவர் எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.

படத்தில் கார்த்தியை மையப்படுத்திதான் கதை. ஹீரோயின் இல்லை என்பதால் அவரைச் சுற்றிதான் எல்லாமும் நடக்கும். இந்தப் படத்துக்காக கார்த்தியின் லுக் ரெடியாகும் போதே ‘பருத்தி வீரன்’ போல இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக் கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக் கொண்டதால் தான் இந்தப்படமே உருவானது.

அப்பா, மகள் இடையிலான பாசம்தான் படத்தின் மையக் கரு. மற்ற விஷயங்கள் எல்லாம் அதைச் சுற்றியே நடக்கும்படியான கதை.

இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது.

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம். இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது. மற்றபடி அடுத்த படம் இந்தக் கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

இந்தப் படம் உருவாக ‘விருமாண்டி, டை ஹார்ட்’ ஆகிய படங்கள் இன்ஸ்பிரேஷனாக இருந்தன.

படத்தில் மூன்று முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப் படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான, இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் தான். ‘கைதி, பிகில்’ இரண்டு படங்களையும் பாருங்கள்,” என்றார்.

Read Previous

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ – டீசர்

Read Next

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’

Most Popular