‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்பையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.
‘ஜான் டோ’ என்பவர் யார் ? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா ? என்ற கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ஜான் டோ குறித்த உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதே கதையின் முக்கியமான அம்சம். பார்வையாளர்களால் எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மர்மமான கதாபாத்திரங்கள், விசாரணை சார்ந்த காட்சிகள் என கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.