கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘ஹீரோ’.
இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன.
அதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இந்த நபர்கள், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். இப்படித் தூண்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாகக் கடுமையாக வலியுறுத்துகிறோம். இப்படியான மோசடி நிகழ்வு அல்லது எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.
அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் ஃபிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்,” என்று அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்கள்.