இணையத்தில் கடும் எதிர்வினைகளை சந்தித்து வருகிறது ‘விசில் போடு’ பாடல்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏப்ரல் 14-ம் தேதி அன்று படத்தின் ‘விசில் போடு’ என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. முதன் முறையாக் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், காட்சிகள் என அடங்கியிருந்தது. இதற்கு இணையத்தில் கடும் எதிர்வினைகளை சம்பாதித்துள்ளது படக்குழு.
பாடலின் இசை, அரங்கம், நடனம் என அனைத்து விஷயங்களிலுமே படக்குழுவினரை கடுமையாக திட்டி வருகிறார்கள் இணையவாசிகள். மேலும், சமீபத்திய விஜய் படங்களின் முதல் பாடலுக்கு இந்த அளவுக்கு இணையவாசிகள் கொந்தளித்து இருப்பது ‘கோட்’ படத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் படக்குழு கவனிக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் 15 மில்லியன், 20 மில்லியன் பார்வைகள் என விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இனி வரும் பாடல்களும் இப்படியாக இருந்தால், படத்தின் எதிர்பார்ப்பு என்னவாக குறையும் என்பதை படக்குழுவினர் புரிந்துக் கொண்டால் நல்லது.