‘இந்தியன் 2’ படக்குழுவினர் மீது பலரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
இந்தப் படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதுவரை இந்தப் படத்திலிருந்து டீஸர் ஒன்று மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனிடையே, தொடர்ச்சியாக போஸ்டர்கள் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் வெளியீடு என்று அறிவித்துவிட்டாலும், பாடல்கள், ட்ரெய்லர் என எந்தவொரு பணியுமே ஆரம்பிக்காமல் இருக்கிறது படக்குழு.
பெரிய முதலீடு உள்ள ஒரு படத்தினை இப்படியா விளம்பரம் செய்வது என்று பலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷங்கர் தனது மகள் திருமணப் பணிகளை முடித்துவிட்டு, ‘இந்தியன் 2’ படத்தின் விளம்பரப் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.