ஜெனிபர் லீ, கிரிஸ் பக் இயக்கத்தில் இசை சார்ந்த பேன்டஸி அனிமேஷன் படமான ‘பிரோசன் 2’ படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழ் வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். படத்தின் கதாநாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசன், தங்கை அன்னா கதாபாத்திரத்திற்கு தொகுப்பாளர் திவ்யதர்ஷினி ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளார்கள்.
படத்திற்கான முன்னோட்ட சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன், திவ்யதர்ஷினி, வசனம் எழுதிய விவேக் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது அனுபவங்களைத் தெரிவித்தனர்.
நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,
“படம் உலகெங்கிலும் பெரும் வெற்றிபெறக் காரணம் பல பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக , முன்னுதாரணமாக இருப்பது தான். இந்த கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்த அனுபவம் அலாதியானது. மிகவும் எளிமையாக, என்னை பிரதிபலிப்பதாக இருந்தது.
என் தங்கை அக்ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவு இப்படத்தில் பணிபுரிவதில் பேருதவியாக இருந்தது. திவ்ய தர்ஷினி அன்னா பாத்திரத்திற்கு அற்புதமாக குரல் கொடுத்திருந்தார்.
பாடலாசிரியர் விவேக் படத்திற்குப் பொருத்தமான அருமையான வசனங்கள் தந்திருந்தார். வழக்கமாக என் படங்களுக்கு நான் இரண்டு நாட்களில் டப்பிங் முடித்து விடுவேன். ஆனால், ‘பிரோசன் 2’வை ஒரே நாளில் முடித்தேன். அதிலும் பாடலை நானே பாடியது எனக்கு பெரிய மகிழச்சியைத் தந்தது,” என்றார்.
திவ்ய தர்ஷினி பேசியதாவது,
“டிஸ்னியில் இருந்து இப்படத்தில் வேலை செய்யக் கேட்ட போதே நான் உற்சாகத்தில் மிதந்தேன். எப்படியானதொரு வாய்ப்பு. சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட். அதிலும் ராஜகுமாரி கதைகள் என்னை முன்வைத்ததாக உணர்வேன்.
எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள். ஆனால் இந்தக் கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள், அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது.
இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வைத் தந்தது,” என்றார்.
படத்திற்கு வசனம் எழுதிய விவேக் பேசுகையில்,
“உலகின் பிரபல நிறுவனமான டிஸ்னியுடன் இப்படி ஒரு அற்புதமான படத்தில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ஸ்ருதிஹாசன், திவ்ய தர்ஷினி போன்ற திறமை மிக்க ஆளுமைகளுடன் பணிபுரிந்ததில் மேலும் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு இயல்பாக உயிரூட்டி உள்ளார்கள்.
படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார்கள். நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விஷயங்களை இழந்திருப்போம். ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம். என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது எனும் அருமையான கருத்து தான் இப்படத்தில் எனக்கு பிடித்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன். அவர் இப்படத்தின் தீவிர ரசிகை,” என்றார்.
படத்தில் ஒலஃப் கதாபாத்திரத்திற்கு காமெடி நடிகர் சத்யன் குரல் கொடுத்திருக்கிறார்.
‘பிரோசன் 2’ படம் தமிழிலும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.