ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், ரஜினிகாந்த். இயக்குனர் ஏஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்துள்ள சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இயக்குனர் ஷங்கர், ராகவா லாரன்ஸ், அருண் விஜய் ஆகியோரும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்,
“இந்த அரங்கைத் தமிழக அரசு நிர்வாகித்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை. தமிழக அரசைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதெல்லாம் மறந்து, இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அரங்கைக் கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலசந்தர் சாருடைய மனதுக்கு ரொம்ப நெருக்கமான பெயர் ரஜினிகாந்த். அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தினாலும், அந்தப் பெயரை யாருக்கு வைக்கலாம் என்று யோசித்து, நல்ல நடிகனுக்குத் தான் வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எனக்கு வைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.
இவனை வைத்துப் படமெடுத்தால் லாஸாகிவிடும் வேண்டாம் என்று சொன்ன போது, என் மீது நம்பிக்கை வைத்து ஹீரோவாக போட்டு படமெடுத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போல் என்னை நம்பி இதுவரை பணம் போட்ட தயாரிப்பாளர்களுடைய பணம் எதுவும் வீண் போகவில்லை. அதே போல் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது.
‘தர்பார்’ படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான் லிங்கா படத்துல நடிச்ச பிறகு இனி இளமையான தோற்றத்துல படம் நடிக்கக் கூடாதுனு நினைச்சேன். அதனால் நாங்க படம் பண்ணுவது தள்ளி போய் கொண்டே இருந்தது.
இடையில என் வயதுக்கேற்றாற் போல காலா, கபாலி என படங்கள் பண்ணி கொண்டிருந்தேன். அப்போது 90’இல் இருந்தது போல் என்னைப் பார்க்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் `பேட்ட’ எடுத்தார். அவர் என்னை இளமையாகக் காண்பிக்க நினைத்து வேலைபார்த்தார்.
அதைப் பார்த்து முடிக்கும்முன் ஒருவாரத்தில் அதேபோல் ஒரு ஸ்கிரிப்ட் உடன் முருகதாஸ் வந்திருந்தார். அருமையான ஒரு படத்தை முருகதாஸ் கொடுத்து இருக்கார். மூன்று முகத்துக்கு அப்புறம் இந்தப் படம் ஃபவர் புல் கேரக்டர் ல பண்ணி இருக்கேன்.
150 படங்கள் பண்ணியிருந்தாலும் த்ரில்லர் சஸ்பென்ஸில் இது ஒரு திருவிழா. அவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளார் முருகதாஸ். தளபதி படத்திற்குப் பின் சந்தோஷ் சிவனுடன் இணைந்துள்ளேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் அவர் உள்ளாரா என கேட்பேன். 29 வருடங்களுக்கு பிறகு அவருடன் இணந்துள்ளது மகிழ்ச்சி.
சந்திரமுகிக்குப் பிறகு நயன்தாராவுக்கு என்னுடய படத்தில் அருமையான கேரக்டர்.
அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. பேட்ட ஆலபத்தை விட தர்பார் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வரும் 12-ம் தேதி எனக்குப் பிறந்த நாள். இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். 69 வயது முடிந்து 70 வயதைத் தொடங்குகிறேன். எப்போதும் போல் இந்தாண்டும் பிறந்த நாளன்று ஊரில் இருக்கமாட்டேன். ரசிகர்கள் ரொம்ப ஆடம்பரமாக என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யுங்கள்.
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத 2 விசயங்களை இந்த விழாவில் சொல்கிறேன்.
முதல் விஷயம் நான் சென்னைக்கு வந்தது பற்றி,
கன்னட மீடியத்தில் படித்த என்னை ஆங்கில மீடியத்தில் சேர்த்தார்கள். படிப்பில் பின் தங்கினேன். ஆனால், அதன் பிறகு ஒரு பணக்கார காலேஜில் சேர்த்து விட்டனர். அங்கும் என்னைப் போல ஆர்வமில்லாதவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். கஷ்டப்பட்டு எனக்கு அண்ணா காலேஜ் ஃபீஸ் கட்டினார். எக்ஸாம் எழுதினால் பாஸ் ஆக மாட்டேன் என்று எனக்குத் தெரியும்.
நடு இரவில் பெங்களூரூவிலிருந்து ட்ரெயின் ஏறினேன். அது தமிழ்நாடு மெட்ராஸூக்கு போகும் என்றார்கள். ஏறினேன், இறங்கும் போது டிக்கெட்டை தொலைத்து விட்டேன். அப்போது எனக்கு கன்னடம் மட்டும் தான் தெரியும். டிக்கெட் தொலைத்து விட்டேன் என்று சொல்லியும் செக்கர் நம்பவில்லை. அப்ப அங்கு வந்த கூலி ஆட்கள் எனக்காக சப்போர்ட் செய்து பேசினார்கள். அதன் பிறகு தான் செக்கர் போ என்று சொல்லி தமிழ்நாட்டு மண்ணுக்குள் விட்டார்.
16 வயதினிலே பரட்டை தான் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தப் படத்தில் எனக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கூடத் தரால் நடிக்க வரச் சொன்னார்கள். ஆனால், பணம் தராமல் என்னை அவமானப்படுத்தினார்கள். அப்போது, பெரிய ஆள் ஆகி ஏவிஎம் ஸ்டுடியோவில் கால்மேல் கால்போட்வில்லை என்றால் ரஜினி இல்லை என்று முடிவுசெய்தேன். அதே போல், ஃபாரின் கார், ஃபாரின் ட்ரைவர் என ஃப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து விடுறா வண்டிய என ஏவிஎம் ஸ்டுடியோ நோக்கி சென்று 555 சிகரெட் பிடித்தேன். அங்கிருந்தவர்கள் கவர்னர்தான் வந்து விட்டாரோ என நினைத்தார்கள்.
அதன் பிறகு பாலச்சந்தரை பார்க்கப் போனேன். 2 வருடத்தில் சாதித்தேன் என்றால், நான் மட்டும் என்று சொல்வது தப்பாகிவிடும். அந்த நேரத்தில் இயக்குநர்கள், பாத்திரம், கதை என எல்லாம் சரியாக அமைந்தது தான் காரணம்.
நம்மால் தான் வெற்றி என்றால் 10% தான். வெற்றி என்பது சந்தர்ப்பம், நேரம், சாணக்கியத்தனம் தான். இப்போது நிறைய நெகட்டிவிட்டி இருக்கிறதும், பிறரைப் புண்படுத்துவதும் சகஜமாகிவிட்டது. சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் அன்பு செய்யுங்கள்,” என்றார் ரஜினிகாந்த்.