சிவகார்த்திகேயனை இயக்குவதற்கு முன்பு புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ‘டாடா’ இயக்குநர்.
கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டாடா’. இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கணேஷ் கே.பாபு.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார்.
அந்தப் படத்தில் முதலில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க இருந்தார். ஆனால், மாரி செல்வராஜ் இயக்கும் படம் உடனே தொடங்குவதாக இருந்ததால் கணேஷ் பாபு படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டது.
தற்போது துருவ் விக்ரமிற்கு பதிலாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதில் நாயகியாக நடிக்கவுள்ளார் தவுதி ஜிவால். இவர் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் முதல் படமாக இருந்தாலும், இவர் தமிழ் திரையுலகிற்கு பரிச்சயமானவர். கெளதம் மேனன் இயக்கிய ‘எரிமலையின் மகளே’ என்ற ஆல்பத்தில் தோன்றியவர் தான் தவுதி ஜிவால் என்பது நினைவு கூரத்தக்கது.