விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் டிவி சீரியல் நடிகர் கவின், இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா இடையேயான காதல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேரனை, சேரப்பா என்று பாசத்துடன் அழைத்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் கவின் மீதான காதலால் சேரனை புண்படுத்தும் அளவிற்கும் நடந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பின்னும் தங்களை கவின், லாஸ்லியா ரசிகர்கள் என அழைத்துக் கொள்பவர்கள் கவின், லாஸ்லியா காதலுக்கு சேரன் தான் குறுக்கே நிற்கிறார் என நினைத்து சமூக வலைத்தளங்களில் கண்டபடி சண்டை போட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில், சேரன் இன்று டிவிட்டரில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில்,
கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு..
உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.
நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.
என பதிவிட்டிருக்கிறார்.
அவர் அப்படி வேண்டுகோள் விடுத்தும் இன்னும் சிலர் தரக் குறைவாகப் பேசி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே கவினுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் ‘செட்டப்’ செய்து போலியாக வாக்குகளை அளித்து வந்ததாக பலரும் குற்றம் சாட்டினர். அந்த போலி ஆட்களின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.