அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படக்குழு

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அதிர்ச்சியில் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படக்குழு.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சோனி மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. இதில் சாய்பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தினைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் முழுமையான திரைக்கதை அமைப்பைத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தனது திரையுலக வாழ்வில் இப்படம் பெரும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் சோகத்தில் இருக்கிறார்கள். படத்தின் ஓடிடி உரிமை பெரும் விலைக்குப் போகும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். இதற்கான விஷயங்களை தயார் செய்து, பல்வேறு ஓடிடி தளங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அனைவருமே மிகக் குறைந்த விலைக்குத்தான் வாங்க முன்வந்துள்ளனராம்.

இதனை படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலிலேயே ஓடிடி உரிமையை விற்றுவிட்டால், அதனை வைத்து படப்பிடிப்பினைத் தொடங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார்கள். ஆனால், நிலைமையோ தலைகீழாகிவிட்டது. இதனால் முதலில் படப்பிடிப்பைத் தொடங்குவோம் என்று, அந்தப் பணியில் இறங்கியுள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

Read Previous

எப்படி சமாளிக்கப் போகிறது நடிகர் சங்கம் ?

Read Next

கமல் – ஹெச்.வினோத் படம் ‘டிராப்’ ?