கமல் – ஹெச்.வினோத் படம் ‘டிராப்’ ?

ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

’துணிவு’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருந்த அவரது 233வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹெச்.வினோத். இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. முதலில் இந்தப் படத்தின் கதையை ஹெச்.வினோத்தே எழுதியிருந்தார். முழுமையாக திரைக்கதை முடித்து கமலிடம் கொடுக்கப்பட்டது.

அக்கதையில் கமல் பல்வேறு திருத்தங்களைக் கூறினார். அதனை முடித்துக் கொடுத்த போது, மேலும் திருத்தங்கள் கூறினார். அப்போது இந்தக் கதையை விட என்னிடம் ஒரு கதை இருக்கிறது, அதைப் பண்ணலாம் என்று ஹெச்.வினோத்திடம் கூறினார் கமல். அந்தக் கதையைத் தொடங்கி திரைக்கதை எழுதிக் கொடுத்தார் ஹெச்.வினோத். அந்தக் கதையிலும் பல்வேறு மாற்றங்கள் கூறினார் கமல்.
இதனால் படப்பிடிப்பு எப்போது என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது.

இதனிடையே ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ‘தக் லைஃப்’, ‘கல்கி’ என படங்கள் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஹெச்.வினோத் படத்தின் நிலை என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது இந்தப் படத்தினை கமல் – ஹெச்.வினோத் இருவருமே கைவிட்டுள்ளார்கள்.

தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருவதால், உடனடியாக தேதிகள் கொடுக்க இயலாது என்று கமல் தெரிவித்துள்ளார். தானும் ஒரு படம் இயக்கிவிட்டு வருகிறேன் என்று ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். இருவரும் சுமூகமாக பேசிவிட்டாலும், வரும் காலத்தில் கூட இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

Read Previous

அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படக்குழு

Read Next

மதிமாறன் – விமர்சனம்

Most Popular