மெர்சல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோ நடித்து வெளிவரும் படம் என்றால் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்ததிலிருந்தே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் அட்லீ முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்.

படம் பார்க்கும் போது கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை. அதிலும் அந்தப் படத்தில் அப்பு கமல், டெல்லி கணேஷைக் கொல்ல ஒரு விதமான ‘செட்-அப்’பை செய்து வைத்திருப்பார். அது போலவே, இந்த ‘மெர்சல்’ படத்தில் மேஜிக் மேன் விஜய் ‘செட்-அப்’ செய்திருப்பதையாவது தவிர்த்திருக்கலாம். இருந்தாலும், நிறையவே மாற்றி யோசித்திருக்கிறார் எதை எழுதியுள்ள இயக்குனர் அட்லீ.  திரைக்கதையை ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத், ரமணகிரி வாசன் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். சரி, கதைக்கு வருவோம்.

சென்னையில் ஒரு இரவில் சில மருத்துவப் பணியாளர்கள் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்களைக் கடத்தியது டாக்டராக இருக்கும் விஜய்தான் என்பதைக் காவல் துறை கண்டுபிடிக்கிறது. கைது செய்யப்படும் விஜய்யை காவல் துறை அதிகாரியான சத்யராஜ் விசாரிக்கிறார். அப்போது விஜய் அவர்களை எதற்காகக் கடத்தினேன் எனச் சொல்கிறார். வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்கள் கொல்லப்படுகிறார்கள், விஜய்யும் சத்யராஜ் பிடியிலிருந்து தப்பிக்கிறார். இதனிடையே, வெளிநாட்டில் ஒரு டாக்டர் வேறு விஜய்யால் கொல்லப்படுகிறார். அந்த வழக்கையும் சத்யராஜ் தான் விசாரிக்கிறார். ஆனால், கொலைகளைச் செய்வது டாக்டராக இருக்கும் விஜய் அல்ல, மேஜிக் நிபுணராக இருக்கும் வேறு விஜய் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கிறார் சத்யராஜ். விஜய் செய்யும் இந்தக் கொலைகளுக்கான காரணத்தில் பிளாஷ் பேக், அதில் அப்பா விஜய், வில்லன் எஸ். ஜே. சூர்யா…அதற்கு மேல் நீங்கள் நினைப்பது சரிதான். இதுதான் ‘மெர்சல்’ கதை.

தன் ரசிகர்களை எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். அவருக்கான ‘மாஸ்’ காட்சிகளையும், தியேட்டரில் கேட்காத அளவிற்கு கைத்தட்டல் வாங்கும் வசனங்களையும் பேசி அவருடைய ஹீரோயிசத்தில் வழக்கம் போல் ‘வெற்றி’க்கொடி நாட்டுகிறார். டாக்டர் விஜய், மேஜிக் நிபுணர் விஜய் இருவரது தோற்றங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. வழக்கம் போல எந்த விஜய் எதைச் செய்கிறார் என்பதை நாம் கவனமாகப் பார்த்தால்தான் படத்தின் திரைக்கதை புரியும். இதே பாணி கதை நகர்த்தலைத்தான் ‘தெறி’ படத்திலும் செய்திருந்தார் அட்லீ. சராசரி ரசிகனுக்கு அது கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும். அப்பா விஜய், தோற்றத்திலும் யதார்த்தம், நடிப்பிலும் யதார்த்தம், மகன் விஜய்களை விட அப்பா விஜய்க்கு கைதட்டல் அதிகம். ஒரு விஜய்க்கே தியேட்டரில் படம் பார்த்தால் வசனங்கள் கேட்காது, மூன்று விஜய் வேறு…கேட்கவா வேண்டும்…வசனங்களை ஸ்பீக்கர் பக்கத்தில் அமர்ந்துதான் கேட்க வேண்டும். ‘தெறி’க்குப் பிறகு விஜய்க்கு இது ‘மெர்சல்’ ஆன படம்தான்.

படத்தில் மூன்று நாயகிகள், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால். பொதுவாக மூன்று ஹீரோயின்கள் என்றாலே பிளாஷ் பேக்கில் வரும் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் அப்படியே மாறியிருக்கிறது. பிளாஷ் பேக்கில் வரும் நித்யா மேனன்தான் மனதில் நிற்கிறார். அசத்தலாக காதல் செய்கிறார், ஆவேசமாகப் பேசுகிறார். சமந்தாவும், காஜல் அகர்வாலும் ஆளுக்கொரு பாடலுக்கும், ஓரிரு காட்சிகளுக்கும் வந்து போகிறார்கள். இருந்தாலும் சமந்தாவின் ‘டேய், தம்பி…வாடா, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன்,’ அடடா…அடடடடடா….அழகோ..அழகு..

வடிவேலு இருக்கிறார் நகைச்சுவை இருக்கும் என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஆரம்பத்தில் இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல்தான் என பேசி கைத்தட்டலை வாங்குகிறார். அதன் பின் குணச்சித்திர நடிகராக மாறிவிடுகிறார்.

வில்லனாக எஸ். ஜே. சூர்யா, அந்த 80கள் கெட்டப்பிலும், இன்றைய கெட்டப்பிலும் வித்தியாசமாகத்தான் இருக்கிறார். கெட்டப்பில்தான் வித்தியாசம், மற்றபடி வழக்கமான வில்லன்தான்.

காவல் துறை அதிகாரியாக சத்யராஜ், அவருடைய உதவியாளராக சத்யன், விஜய்யின் வளர்ப்பு அம்மாவாக கோவை சரளா, மற்றொரு வில்லனாக ஷரத் பெரடி சில காட்சிகள்தான் என்றாலும் நினைவில் நிற்கிறார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் இடைவேளைக்கு முன்பே மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. இருந்தாலும் ‘நீதானே…’ பாடல்தான் திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது. மற்ற பாடல்களை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்கள்.

பிளாஷ் பேக் மிகவும் நீளம். ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலை விஜய் பஞ்சாப்பில் பாடி ஆடுகிறார். தமிழன் விஜய்க்கு பஞ்சாபிப் பெண் நித்யா மேனன் மீது காதல் என்பதெல்லாம் ஏனோ…அவரை தமிழ்ப் பெண்ணாகவே காட்டியிருக்கலாமே…?.

அனைவருக்கும் மருத்துவம் இலவசம் ஆக வேண்டும் என்ற கருத்துக்காகவும் படத்தின் கிளைமாக்சில் விஜய் பேசும் வசனத்திற்காகவும் தாராளமாகக் கைதட்டி ரசிக்கலாம்.

விஜய் அவருடைய ரசிகர்களை ஏமாற்றவில்லை, தலைப்பிற்கேற்றபடி ‘மெர்சல்’ ஆன படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்.

Cast & Crew

இயக்கம் – அட்லீ

இசை – ஏ.ஆர்.ரகுமான்

நடிப்பு – விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர்.

மெர்சல் டீசர்

Read Previous

மேயாத மான் விமர்சனம்

Read Next

‘கபாலி’ முதல் நாள் வசூலை ‘மெர்சல்’ மிஞ்சுமா ?

Most Popular