காதல் கதைகளை தமிழ் சினிமாவில் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காலம் மாற மாற அதுவும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது.
சொல்லாத காதல், நிச்சயம் செய்த பெண் மீதான காதல், என இதற்கு முன் பார்த்த கதையாக இருந்தாலும் இந்தப் படத்தில் காதலைக் கையாண்ட விதம் கிளைமாக்சில் நிறையவே அதிர்ச்சியைத் தருகிறது. இருந்தாலும் ஒரு கலகலப்பான, வட சென்னையில் யதார்த்தமான காதலைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது.ஹ
அறிமுக இயக்குனர் ரத்னகுமார் கிளைமாக்சில் தரும் அதிர்ச்சியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் அவ்வப்போது அசத்தல் என்று சொல்லுமளவிற்கு படத்தை நகர்த்தியிருக்கிறார்.
வட சென்னையில் ஒரு சராசரியான குடும்பத்தைச் சேர்ந்தவர் வைபவ். தங்கை இந்துஜாவுடன் வசித்து வருகிறார். அவருடைய நெருங்கிய நண்பர் விவேக் பிரசன்னா. கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே வைபவ்வுக்கு, பிரிய பவானி சங்கர் மீது காதல். ஆனால், அந்தக் காதலை அவரிடம் சொல்லாமல் ஒருதலையாய் காதலித்து வருகிறார். பிரியாவிற்கு திருமண நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் வைபவ் தற்கொலைக்கு முயல்கிறார். ஆனால், வைபவ்வின் நண்பர் விவேக் பிரசன்னாவும், அருண் பிரசாத்தும் பிரியாவிடம் சென்று பேசி, வைபவ்வை கண்டபடி திட்டச் சொல்கிறார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்தபடி வைபவ்வை திட்டுகிறார் பிரியா. அதனால், பிரியா மீது வெறுப்படையும் வைபவ் தற்கொலை செய்யும் முடிவை விட்டுவிடுகிறார். அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் பிரியா மீது வைபவ் வைத்துள்ள காதல் பற்றி பிரியாவுக்குப் புரிய வருகிறது. அவரும் வைபவ்வை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், பிரியாவின் அப்பா அதை எதிர்க்கிறார். அதன் பின் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது படத்தின் மீதிக் கதை.
வைபவ், இதற்கு முன் இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. படம் முழுவதும் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு, அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதிலும் அவருக்கு சரளமாக வரும் சென்னைத் தமிழ் அவருடைய நடிப்பை மேலும் யதார்த்தமாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது. கிடைத்த பெயரை அப்படியே ‘கப்’பென்று பிடித்துக் கொண்டு இன்னும் மேலே வந்துவிடுங்கள் வைபவ்.
டிவி சீரியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் டிவியில் பார்த்ததை விட படத்தில் கொஞ்சம் அழகு குறைந்தே காணப்படுகிறார். மேக்கப்பைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இருந்தாலும் அவருடைய சிரிப்பில் அந்த சிறு குறையைக் கூட நிரந்தரமில்லாமல் செய்துவிடுகிறார். குடும்பப் பாங்கான ஹீரோயின்கள் பஞ்சம் உள்ள தமிழ் சினிமாவில் பிரியா பவானி இனி தாராளமாக பவனி வரலாம்.
வைபவ் நண்பராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா. தமிழ் சினிமாவிற்குக் கிடைத்துள்ள மற்றுமொரு யதார்த்தமான நடிகர். ஹீரோ அளவிற்கு அவரும் படம் முழுக்கவே வருகிறார். ஒரு பாடல் வேறு கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவருடைய காதலியாக, வைபவ்வின் தங்கையாக இந்துஜாவும் நிறைவாக நடித்திருக்கிறார்.
கொஞ்சமாக வந்தாலும் வைபவ்வின் நண்பனாக வரும் அருண் பிரசாத், பிரியாவின் தோழியாக வரும் அம்ருதா சீனிவாசன் கவனிக்க வைக்கிறார்கள்.
படத்தில் போகிற போக்கில் பல ‘நச்’ வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள், தியேட்டரில் கைதட்டல்கள் அள்ளுகிறது. பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சுவாரசியமாக உள்ளன.
இளம் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இப்படத்தின் கிளைமாக்சில் வருவது போல நடந்து கொண்டால் காதல் கைகூடிவிடும் என்று தப்பாக புரிந்து கொள்ளாதீர்கள் என்பது நமது வேண்டுகோள். அந்த வேண்டுகோளுடன் படத்தைப் பார்க்க நீங்கள் தாராளமாகப் போகலாம்.
Cast & Crew
இயக்கம் – ரத்னகுமார்
இசை – பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா, அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் மற்றும் பலர்
மேயாத மான் டிரைலர்