காளி – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பல இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் பெண் இயக்குனர்கள் இங்கு குறைவாகவே இருக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமான படமாக இல்லாமல் இந்தப் படத்தை வித்தியாசமான படமாகக் கொடுத்திருக்கிறார்.

ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நாயகன் நடிப்பார் அல்லது அதிக பட்சமாக மூன்று வேடங்களில் நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நான்கு கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். மற்றவர்களின் இளமைக் கதாபாத்திரங்களில் அவர் ஏன் நடிக்க வேண்டும் என்ற நெருடல் இருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்களில் அவரது நடிப்பு குறிப்பிடும்படி அமைந்திருக்கிறது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான விஜய் ஆண்டனிக்கு அவர் ஒரு தத்துப் பிள்ளை என்பது தெரிய வருகிறது. தன்னுடைய உண்மையான அப்பா, அம்மா யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவருக்கு வருகிறது. வளர்ப்புப் பெற்றோர் கொடுத்த ஒரே ஒரு விவரத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார். எப்படியோ அவருடைய அம்மாவின் ஊரைக் கண்டுபிடித்து அங்கு சென்றுவிடுகிறார். ஆனால், அவருடைய அப்பா யார் என்பதைக் கண்டுபிடிப்பது அவருக்கு கடும் சவாலாக இருக்கிறது. மருத்துவ உதவியுடன் அப்பா யார் என்பதைக் கண்டுபிடித்து விடுகிறார். இருப்பினும் அதை அவரிடம் சொல்லாமலே மறைக்கிறார். அது ஏன் என்பதுதான் சஸ்பென்ஸ்.

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் கூடுதலாக சில கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். டாக்டர் பரத் ஆக அமெரிக்காவில் அசத்தலான தோற்றத்தில் அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி. தமிழ்நாட்டிற்கு வந்த பின் கல்லூரி மாணவர், திருடன், ஃபாதர் என மற்றவர்களின் பிளாஷ்பேக்கில் அவர்களுடைய இளமைக்கால தோற்றங்களில் விஜய் ஆண்டனியே நடித்திருக்கிறார். அதில் ‘காளி’ கதாபாத்திரத்தில் அவருடைய தோற்றமும், நடிப்பும் மிரள வைக்கிறது. கல்லூரி மாணவராக காதல் குறும்புடனும், ஃபாதர் ஆக அமைதியே திருவுருமாக அமைந்தவராகவும் நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு மேலும் மெருகேறியிருக்கிறது.

படத்தில் நான்கு கதாநாயகிகள், அனைவருக்குமே சரியான முக்கியத்துவம் உண்டு. அஞ்சலி மட்டும் கலகலப்பாக நடித்து கவர்கிறார். சுனைனா ஏழைப் பெண்ணாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். அம்ரிதா காதல் நடிப்பில் கரை சேர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் கிராமத்துப் பெண்ணாக ‘கள்ளக் காதல்’ செய்து கண்ணீர் வடிக்க வைக்கிறார்.

படத்தின் கலகலப்புக்கு முக்கியக் காரணம் யோகி பாபு. முதன் முறையாக படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரம் அவருக்கு. தனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து அவரும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

விஜய் ஆண்டனியின் அப்பாவாக இவர்கள் இருப்பார்களோ என்ற சந்தேக வலையில் உள்ள கதாபாத்திரங்களில் மதுசூதனராவ், ஜெயப்பிரகாஷ், நாசர். வில்லன்களாக வேலராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ்.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவும், சக்தி சரவணன் சண்டைப் பயிற்சியும் படத்தை வேறு ஒரு தளத்தில் காட்டுகின்றன.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பாடல்களில் அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டார். குறிப்பாக ‘அரும்பே…., அடி வயிற்றில்…’ பாடல்கள் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பெறும்.

சில காட்சிகள் கொஞ்சம் பழைய பார்முலாவில் உள்ளன. குறிப்பாக கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நாசர், காதலுக்காகத் தற்கொலை செய்து கொள்ளும் காதலி, காதலனுடன் ஒரே இரவில் தங்கியதால் அம்மாவான நாயகி, என  அந்தக் காலக் கட்டங்களுக்கு அவை பொருத்தமான காட்சிகளாக இருந்தாலும், அவற்றை வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

இந்தப் படம் அம்மா சென்டிமென்ட் படம் மட்டுமல்ல, அப்பா சென்டிமென்ட் படமும் கூட. விஜய் ஆண்டனியிடமிருந்து ‘பிச்சைக்காரன்’ போன்ற அழுத்தமான படங்களையே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

சாதி வெறி பிடித்தவர்களுக்கிடையில் ஏழை மக்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகன், மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கும் ஊர் என மனதில் இடம் பிடிக்கும் விஷயங்களும் படத்தில் உண்டு.

Read Previous

நான் ஒரு இந்தியன், பாரதிராஜாவுக்கு விஷால் பதில்

Read Next

விஜய் டிவி – பிக்பாஸ் சீசன் 2 – முன்னோட்ட வீடியோ